மாநகர பேருந்துகளில் முக கவசம் அணியாத பயணிகள் மீது வழக்குப்பதிவு: காவல் ஆணையர்

மாநகர பேருந்துகளில் முக கவசம் அணியாத பயணிகள் மீது வழக்குப்பதிவு: காவல் ஆணையர்

மாநகர பேருந்துகளில் முக கவசம் அணியாத பயணிகள் மீது வழக்குப்பதிவு: காவல் ஆணையர்

மாநகர பேருந்துகளில் முக கவசம் அணியாமல் பயணம் செய்யும் பயணிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகில், போக்குவரத்து காவல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  கொரோனா தடுப்பு  விழிப்புணர்வு முகாமை சென்னை  காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார். விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மேடையில் பேசுகையில், "நாடு முழுவதும் கொரோனா அலை தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவை தடுக்க சென்னை காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தினமும் 200 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

கொரோனாவை தடுக்க சுலபமான விஷயம். அனைவரும் முக கவசம் அணியுங்கள், கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விஷயங்களை பின்பற்றினால் கொரோனாவை தடுக்க முடியும்.

முக கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள். பல நாடுகளில் இது போன்ற விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளார்கள். ஹெல்மெட் போடாமல் செல்வது அவர்களது தனியாக ரிஸ்க் எடுப்பது போன்றது. ஆனால் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களால் அவருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு. அதனால் தான் காவல்துறை அபராதம் விதித்து வருகின்றனர். நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதற்கான உணவு சாப்பிடுங்கள். அனைவரும் தடுப்பூசி போடுங்கள், 78 சதவீதத்திற்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு வராமல் வாய்ப்பு இருக்கிறது. தடுப்பூசி போட்டு கொண்டு கொரோனா சங்கிலியை உடைக்கலாம்" என்று அவர் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறுகையில், "கொரோனாவை தடுக்க சென்னை காவல்துறையின் அனைத்து பிரிவு போலீசாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனாவை தடுக்க சுய கட்டுப்பாடு அனைவருக்கும் தேவை. இரவு முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையே சரியாக சென்று சேர்ந்துள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் ஏறி போலீசார் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பயணிகள் முக கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கி வருகின்றனர். முக கவசம் அணியாமல் பேருந்தில் பயணம் செய்யவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com