நடிகர் சங்க இடம் விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தது தொடர்பாக சரத்குமார் மற்றும் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலத்தில் கீர்த்திராஜ் என்பவருக்கு சொந்தமான 26 செண்ட் நிலத்தை, நடிகர் சங்கத்துக்காக அச்சங்கத்தின் அப்போதைய தலைவர் ராதாரவி வாங்கியதாக தெரிகிறது. 1996ம் ஆண்டுக்குப்பிறகு இந்த இடம் இரண்டாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் விஷால் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புகாரை விசாரித்து அதில் முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் முறைகேடு புகார் தொடர்பாக நடிகர் ராதாரவி, சரத்குமார் உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.