தாக்கப்பட்ட ஊடகத்தினர்: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு!
ஊடகத்தினர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேமுதிக நிர்வாகி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, குமரெட்டியார்புரத்தில் கடந்த 56 நாட்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 56வது நாள் போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்ட தேமுதிகவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரேமலதா, தாம் வருகை தந்திருப்பதால் தான் ஊடகத்தினர் செய்தி சேகரிக்க வந்துள்ளதாக விமர்சித்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் மீது தேமுதிகவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஆறுமுகநயினார், ஜெயராமன், அங்கயற்கண்ணி, ஜெயராமன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பத்து பேர் மீது 147, 148, 294 பீ, 323 மற்றும் 506 இரண்டாம் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.