"குண்டு வைப்போம்... துப்பாக்கியால் சுடுவோம்"- மிரட்டிய கர்னல் பாண்டியன்; காவல்துறை ஆக்‌ஷன்

"குண்டு வைப்போம்... துப்பாக்கியால் சுடுவோம்"- மிரட்டிய கர்னல் பாண்டியன்; காவல்துறை ஆக்‌ஷன்
"குண்டு வைப்போம்... துப்பாக்கியால் சுடுவோம்"- மிரட்டிய கர்னல் பாண்டியன்; காவல்துறை ஆக்‌ஷன்

“குண்டு வைப்போம்” என தமிழ்நாடு அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த முன்னாள் ராணுவ வீரரும் பாஜக உறுப்பினருமான கர்னல் பாண்டியன் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிந்திருக்கிறது.

கிருஷ்ணகிரியில் சில தினங்களுக்கு முன் இருதரப்பு தகராறொன்றின் போது ராணுவ வீரர் பிரபு என்பவரை, திமுக கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் தாக்கினர். அதில் படுகாயமடைந்த பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி திமுக அரசுக்கு எதிராக பாஜகவை போராட்டத்தை முன்னெடுக்கச் செய்தது.

அதன்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள சிம்சன் எதிரில் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த போராட்ட கூட்டத்தின் போது முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசியது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. அவர் பேசுகையில், “ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. எங்களுக்கு பரீட்சை வைக்க வேண்டுமென நினைத்தால் அது சட்டம் ஒழுங்கை கெடுத்துவிடும். ஏனெனில் குண்டு வைப்பதில், துப்பாக்கிச் சுடுவதில் திறமைசாலிகள் ராணுவ வீரர்கள். ஆனால் இதையெல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. அதேநேரம் செய்ய வைத்து விடாதீர்கள் என அரசை எச்சரிக்கிறேன்” என பேசியிருந்தார்.

இதோடு நிறுத்தாமல், நீங்கள் பேசியது மிரட்டல் தொனியில் இருக்கிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது மிரட்டல் அல்ல. எச்சரிக்கை. இனிமேலும் இது தொடர்ந்தால், நாங்கள் செய்வோம். உலகிலேயே ஒழுக்கமானது ஆர்மிதான். நீங்கள் இனி செய்தால் நாங்களும் செய்வோம்” என்று அதே தொனியிலேயே மீண்டும் பேசியிருந்தார் பாண்டியன்.

இதைத் தொடர்ந்து, “தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு “இது தீவிரவாதமல்ல. எங்கள் நண்பனை ஏன் கொன்றீர்கள்? அதற்கு நியாயம் வேண்டும். இது மிரட்டல்தான். எச்சரிக்கிறேன்” என கத்தி பேசினார். கர்னல் பாண்டியனின் இந்த பேச்சு குறித்த வீடியோக்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், “ராணுவ வீரராக இருந்தவர் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு பகீரங்கமாக மிரட்டல் விடுக்க முடியும்? இதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? ஏன் அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? ராணுவ வீரரே பயங்கரவாதத்தை முன்னெடுத்துச் செல்வது எப்படி தகும்?” என்றெல்லாம் கர்னல் பாண்டியனுக்கு எதிராக கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசை மிரட்டி, எச்சரித்த கர்னல் பாண்டியன் மீது சென்னை காவல்துறை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, ராணுவ வீரர் பிரபு உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திமுக கவுன்சிலர் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com