விசா காலம் முடிந்து தங்கியிருந்த 188 வெளிநாட்டினர் மீது வழக்கு! தமிழக டிஜிபி முக்கிய உத்தரவு
தமிழகத்தில் விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 17,770 வெளிநாட்டினர்..
தமிழக டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசாவின் கீழ் தமிழகத்தில் தங்கியிருக்கின்றனர். உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு பிரிவு புள்ளிவிபரப்படி, 2011 முதல் 25.05.2025 வரை 17,770 வெளிநாட்டினர் விசா காலம் முடிந்து தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தமிழகம் வந்து இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இவர்களைக் கண்டுபிடிக்க தமிழ்நாடு காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாட்டினர் பதிவு அதிகாரிகளாக இருக்கும் மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் விசா காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து அவர்கள் இந்தியாவில் தங்குவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 66 வழக்குகள் பதிவு!
தமிழகத்தில் 2022 முதல் 25.05.2025 வரை கடந்த நான்கு ஆண்டுகளாக விசா காலம் முடிந்து தங்கியிருந்ததாகக் கண்டறியப்பட்ட 188 வெளிநாட்டினர் மீது 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக கடந்த 4 ஆண்டுகளாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த 31 பேர் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 280 வெளிநாட்டினர் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மியான்மார் நாட்டை சேர்ந்த 95 பேர் தங்கியுள்ளனர். சட்டவிரோதமாக, விசா காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினரை தங்க வைக்க திருச்சியில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் 151 வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். இந்த முகாமில் இட நெருக்கடி இருப்பதால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் அவர்கள் தொடர்பான வழக்கு முடியும் வரை தங்க வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2022 முதல் 2025 மே 25 வரை 91 இலங்கை தமிழர்கள் உட்பட 237 வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு சொன்ன தகவல்..
மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், "சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 2021-ல் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி மத்திய வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்படி, வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரங்கள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், மத்திய அரசு அறிக்கையாக அல்லாமல் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.