\
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை
Published on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில், விசாரணையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பிலும், தமிழக பொதுத்துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்," விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது"  என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com