10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
பொருளாதரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், சாதிரீதியாக இட ஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியும் என்றும் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, அரசியல் நோக்கிற்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என குற்றச்சாட்டை முன்வைத்தார். வழக்கு குறித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.