“சிந்திக்கச் சொன்னவர் பெரியார்..” என ஏன் பாடுகிறேன்? - நச்சுனு விளக்கம் கொடுத்த டி.எம்.கிருஷ்ணா!
பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சி இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்துள்ளார்.
இவ்விழாவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்களின் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னையின் 18 இடங்களில் நாளை முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரையில், 4 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நடைபெற உள்ளது.
இந்நிலையில், கர்நாடக இசை பாடகரும் செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா பங்கேற்று பாடல்களை பாடினார். பின்னர் புதிய தலைமுறை செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:-
சிந்திக்கச் சொன்னர் பெரியார் பாடல் குறித்து..
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்.. சுய புத்திய பயன்படுத்தி சிந்திக்க வேண்டும் என்பது எப்பொழுதும் தேவை தானே. இப்பொழுது ஏன் அதிகமாக தேவை என்றால், நம்ம நாட்டில் ஒரே மாதிரிதான் எல்லாரும் யோசிக்கணும், ஒரே மாதிரிதான் எல்லாரும் ட்ரெஸ போட்டுக்கணும் என்பது போன்ற சிந்தனைகள் அதிகமாக பரப்புறாங்க. அப்படி இருக்கும் போது இன்னும் அடிச்சு சொல்லனும்ல.
பெரியார் பற்றிய சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு..
அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். நான் என்னுடைய வேலையை பண்றேன். என் வேலை என்ன, சமத்துவத்த பத்தி பேசணும், பாடணும், கொண்டாடனும். மக்களோட சேரணும். எல்லா மக்களும், எல்லா கலைகளும் ஒன்று என்ற கருத்த எந்தவிதமா கொடுக்க முடியுமோ அப்படி கொடுக்கப் போறேன். அதில் பெரியார் வருவார், அம்பேத்கர் வருவார், அயோத்திதாச பண்டிதர் வருவார் என எல்லாரும் வருவாங்க. தமிழ்நாடு இன்னிக்கு இப்படி இருக்குனா இவங்க எல்லாருடைய கருத்து செயல்கள் இதெல்லாம்தான் காரணம். நான் ஒரு குடிமகன் என்னுடைய பணிய செய்றேன்.
எல்லாரையும் கேள்வி கேட்கணும்ங்க.. கேள்வி கேட்பது என்பது முக்கியமான விஷயம். கேள்வி கேட்பதை சொல்லிக் கொடுப்பதுதான் முக்கியமான வேலை. கேள்வி கேட்பது என்பது சுலபமான விஷயம் இல்லை. கேள்வி என்பது ஆழமான விஷயம். கேள்வி கேட்க சிந்திக்கணும். கேள்வி கேட்கத்தான் இவங்க எல்லாரும் சொல்லி இருக்காங்க. உன்னுடைய உரிமையை கேளு, போராடு.. கற்றுக்கொடு என்றுதான் எல்லாரும் சொல்லி இருக்காங்க. இது மிகவும் எளிமையான கருத்து. இதில் சிக்கலே இல்லை.
லுங்கி அணிந்திருப்பது பற்றி..
உங்க கேள்வியே தப்பு.. தமிழ்நாடு உடைதானுங்க இது. லுங்கி பத்தி நம்மளே இப்படி பேச ஆரம்பிச்சா எப்படிங்க. எனக்கு லுங்கி பிடிக்கும். நான் போட்டுப்பேன்.