தண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் கார், பைக் கழுவும் தொழில் பாதிப்பு
கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மற்றும் புறநகரில் கார், பைக் கழுவும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு கார் மற்றும் பைக் சர்வீஸ் மையங்களில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வாட்டர் வாஷ் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. சில மையங்களில் டேங்கர் லாரிகளில் இருந்து அதிக விலைக்கு தண்ணீரை வாங்கி, வாட்டர் வாஷ் சேவையைத் தொடர்ந்து வருகின்றனர்.
அதுபோன்று பல மையங்களில் வாட்டர் வாஷ் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளைச் சேர்ந்த இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், பணி இல்லாததால் திருவண்ணாமலை உள்ளிட்ட தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு மையத்தில் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஹோண்டா, பஜாஜ், ஹீரோ உள்ளிட்ட இருசக்கர வாகன விநியோக நிறுவனங்களிலும் வாட்டர்வாஷ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.