“ஜிஎஸ்டி வரி கட்டவில்லை என அவமானப்படுத்தினார்கள்” - கடிதம் எழுதிவிட்டு மேலாளர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 20 ஆண்டு காலமாக மேலாளராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு செல்வம் தொழிற்சாலையில் அவருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் செல்வத்தின் அறையை சோதனை செய்த போலீஸார் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில், “20 ஆண்டு காலமாக பணிபுரிந்து வந்த என்னை ஒரு மாதம் ஜிஎஸ்டி வரி கட்டவில்லை என்கின்ற காரணத்திற்காக சக ஊழியர்கள் முன்பு நிறுவனத்தின் துணை தலைவர் ராஜன் அவமானப்படுத்தினார். ஜிஎஸ்டி வரி செலுத்திய பிறகும் எனக்கு சேரவேண்டிய இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாயை தராமல் அலைக்கழித்தார். மனோகர் என்பவரின் பேச்சை கேட்டு ராஜன் எனக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காததால் மனமுடைந்து வேறுவழியின்றி தற்கொலை செய்துகொள்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து உயிரிழந்த செல்வத்தின் மகன் சுனில் கவாஸ்கர் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதில் தொழிற்சாலையின் துணை தலைவர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)