திருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி விழா: ஆன்லைன் மூலம் கார் பார்க்கிங் புக்கிங் !
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு ஆன்லைன் மூலம் கார் பார்க்கிங் புக் செய்யும் வசதியை காவல்துறையினர் முதல்முறையாக ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த வருடம் வரும் 29-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சித்ரா பௌர்ணமி, திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படும். திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தசிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே, போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் இந்த வருடம் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். மேலும் சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிகமானோர் வருவார்கள் என்பதால் தங்களின் வாகனங்களை எங்கே நிறுத்துவது என்று குழப்பம் ஏற்படும். அப்படி வரும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்துவது குறித்து குழப்பம் ஏற்படாமல் இருக்க காவல்துறை இந்த ஆண்டு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி www.tvm pournami.in என்ற இணையதளத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை பதிவு செய்து அதன் படிவத்தை டவுன்லோடு செய்து எடுத்து வந்தால் குறிப்பிட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தி கொள்ளும் வசதியை முதல் முறையாக திருவண்ணாமலை காவல்துறை தொடங்கியுள்ளது. வரும் 29-ஆம் தேதி அன்று இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும். 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று காவல்துறையினரால் எதிர்பார்க்கபடுகிறது. ஆதலால் காவல்துறையினர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும் இதே முறையை கையாள உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு :www.tvm pournami.in என்ற இணையதளத்தை காணலாம்.