கொடுமுடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்த விபத்தில், 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுநாத், தாமோதரன், கிருஷ்ணசாமி மற்றும் முருகசாமி. இதில் தாமோதரன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் நான்கு பேரும் ஜவுளித்தொழில் செய்து வந்த நிலையில், ஜவுளிக்கான நூல் வாங்க கரூர் பகுதிக்குச் செல்வது வழக்கம் எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்றும் பிற்பகலில் நூல் வாங்குவதற்காக கரூர் பகுதிக்கு கார் மார்க்கமாகச் சென்றுள்ளனர்.
காரானது கொடுமுடி அருகே உள்ள பள்ளக்காட்டூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலுள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.