சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: மின்கசிவு காரணமா..?
சென்னை கிண்டியில் ஓடும் கார், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர், காஞ்சிபுரத்தில் பல் மருத்துவ பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். பணிக்குச்செல்ல அவர் சென்னையிலிருந்து காரில் சென்றுகொண்டிருந்தார். கார் கிண்டி பட்ரோட்டில் வந்தபோது, காரில் இருந்து புகை வருவதை அறிந்த ஓட்டுநர் கிருபா, இதுகுறித்து சித்ராவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட இருவரும் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினர். அதற்குள் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கார் நடுரோட்டில் நின்று தீப்பிடித்து எரிந்ததை அவ்வழியாக சென்றவர்கள் கூடி நின்று பார்த்தனர். கார் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.