திருமணம்.. கலையுலகப் பொன்விழா! கலைஞரின் திரை அரசியலுடன் கலந்து பயணித்த விஜயகாந்த்!

கலைஞர் கருணாநிதிக்கும், புரட்சி கலைஞருக்குமான திரையுலக மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
கருணாநிதி, விஜயகாந்த்
கருணாநிதி, விஜயகாந்த்ட்விட்டர்

தமிழ்த் திரையுலகில் நடிகர் விஜயகாந்திற்கும், கலைஞர் கருணாநிதிக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. இருவரும் மக்கள் அரசியலை திரையில் பேசியவர்கள். அரசியல் பயணத்திற்கு முன்புகூட, கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாகவே பழகி வந்த விஜயகாந்த், சினிமாவில் தரை டிக்கெட்டில் அமர்ந்து அவரின் கதை, வசனத்தை பார்த்து கை தட்டி ரசித்திருப்பதாக பல இடங்களில் பேசியிருக்கிறார். கருணாநிதியின் கதை, வசனத்தில் ’வீரன் வேலுத்தம்பி’, ’பொறுத்தது போதும்’, ’மக்கள் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

திரை வாழ்க்கை மட்டுமின்றி, நிஜவாழ்க்கையிலும் கருணாநிதியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் விஜயகாந்த். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற விஜயகாந்த் - பிரேமலதா திருமணத்தை, முன்நின்று நடத்தியதே அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான். அவர்மீது தனிபாசம் கொண்ட விஜயகாந்த், கடும் சவாலை எதிர்கொண்டு திரையுலகம் சார்பில் கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி விழாவை நடத்தினார். கலைஞருக்கு தங்க பேனாவையும் அவர் பரிசாகக் கொடுத்தார்.

2006ல் தனித்து நின்று தனது செல்வாக்கை நிரூபித்த விஜயகாந்த், 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவரானார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணிவைத்த விஜயகாந்த், திமுக பக்கம் மட்டும் செல்லவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், விஜயகாந்தின் தேமுதிக, திமுகவோடு கூட்டணி வைக்கும் என நம்புகிறீர்களா என கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, பழம் நழுவி பாலில் விழும் என்று பதில் கூறினார் கருணாநிதி. ஆனால் திடீர் திருப்பமாக வைகோ, திருமாவளவன், இடதுசாரிகளுடன் மக்கள் நலக்கூட்டணி அமைத்து களம்கண்ட விஜயகாந்த், அந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.

கருணாநிதி மறைந்தபோது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த விஜயகாந்த், கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் வீட்டிற்குக்கூட செல்லாமல் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று கண்ணீர்விட்டு அவர் அழுததை யாராலும் மறக்க முடியாது.

இப்படியான சூழலில், திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை அன்பிற்கினிய நண்பர் என்றே அழைத்து வந்தார். இரண்டு முறை நேரில் சென்றும் நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மறைந்த நிலையில், இயற்கை இரக்கமின்றி தனது நண்பரின் வாழ்வை எடுத்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தார் ஸ்டாலின். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் நடைபெற இருந்த வைக்கம் நூற்றாண்டு விழாவைவும் அவர் ரத்து செய்தார்.

ராஜாஜி அரங்கில் விஜயகாந்தின் உடலை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்க அனுமதி கோரிய நிலையில், அங்கு சீரமைப்புப் பணிகள் நடப்பதால் சென்னை தீவுத் திடலை வழங்கியது தமிழக அரசு. அத்தோடு, விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அரசின் முழு ஒத்துழைப்புடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை பிரேமலதா விஜயகாந்த்தும் தன்னுடைய தெரிவிக்கும் பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com