கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ்.., கதறி அழுத பிரேமலதா.. பார்ப்போரை உருக்கும் காட்சி!
summary
மறைந்த விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் படம் இன்று புதுப்பொலிவுடன் 400க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டுள்ளது. இத்திரைப்படத்தைப் பார்த்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் திரையில் விஜயகாந்தைப் பார்த்தவுடன் கதறி அழுதனர்.
தேமுதிக கட்சியின் நிறுவனரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த் திரைவாழ்க்கையில் 100-வது படம் கேப்டன் பிரபாகரன். இத்திரைப்படமே விஜயகாந்த் அவர்களுக்கு பொதுமக்களிடம் ‘கேப்டன்’ என்ற அடைமொழி வருவதற்கு காரணமாக அமைந்தது. 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஆர்கே செல்வணி இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த் உடன் சேர்ந்து சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதி 73 வது பிறந்தநாள் வருவதையொட்டி கேப்டன் பிரபாகரன் படம் புதுப்பொலிவுடன் தமிழ்நாடு முழுதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் திரையிடப்பட்ட கேப்டன் திரைப்படத்தை பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் பார்த்தனர். அப்போது திரையில் விஜயகாந்தை பார்த்ததும் இருவரும் கதறி அழும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போர் மனதையும் உருக்கி வருகிறது. மேலும், ரீ-ரிலீஷ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை ரசிகர்கள் விசிலடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.