தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி இல்லை - போராட்டம் நடத்திய குரூப் 4 தேர்வர்கள்!

தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி இல்லை - போராட்டம் நடத்திய குரூப் 4 தேர்வர்கள்!
தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி இல்லை -  போராட்டம் நடத்திய குரூப் 4 தேர்வர்கள்!

ஓசூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்த தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி  தேர்வுகள் இன்று காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வினை எழுதினர்.

ஓசூர் பகுதியில் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றது. ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினர்.

இந்த நிலையில் இன்று காலை தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு மேல் சென்ற மாணவ மாணவியர்களை தாமதமாக வந்துள்ளீர்கள் எனக்கூறி தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வு எழுத வந்த 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், அந்த வழியாக வந்த உதவி இயக்குநரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் நேரில் வந்து தாமதமாக வந்த தேர்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து தாமதமாக தேர்வு எழுத வந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் கூறும் போது, ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இங்கு தேர்வு எழுத வந்தோம், தேர்வு மையங்களுக்கு செல்ல முறையான வழிகாட்டுதல் இல்லாததால் தேர்வு மையங்களுக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டது. 2 நிமிடம் 3 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தேர்வு எழுத விடாமல் எங்களை திருப்பி அனுப்பியது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர். வெளியேற்றப்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வுகள் முடியும் வரை அனைவரும் அங்கேயே காத்திருந்தனர.

இதனிடையே குரூப் 4 தேர்வை 84% பேர் எழுதியுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 22 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 18.50 லட்சம் பேர் தேர்வை எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். 3 மணி நேரம் போதவில்லை என்றும் யுபிஎஸ்சி பேட்டர்ன்  போல் மறைமுக வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com