World Cancer Day | சென்னை ஐஐடி சார்பில் புற்றுநோய் மரபணு தரவுத்தளம்!
உலக புற்றுநோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தான தொகுப்பை பார்க்கலாம்...
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பாதிப்பு..
இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம். நாடு முழுவதும் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் தரவுகள் மூலம் தெரியவருகிறது.
2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் சென்னை ஐஐடியில் புற்றுநோய் மரபணு தரவு தளம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிக்கு ஏன் புற்றுநோய் ஏற்பட்டது, அதை குணப்படுத்த மரபணுவில் குறைவாக இருக்கும் புரோட்டின் அளவையும் கணக்கிட்டு மருந்துகள் உருவாக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
புற்றுநோய் மரபணு தரவுத்தளம்..
தற்போது 480 மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டாலும் 2 லட்சம் மாதிரிகள் என்கிற இலக்கோடு சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. வரும் காலத்தில் இந்த மரபணு தொகுதி கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட வகையான புற்றுநோய் மருந்துகளை தயாரிக்கவும் அவற்றின் மூலம் நோயாளிகளை குணப்படுத்தவும் முடியும் என கூறுகிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி.
உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக 500 புற்றுநோயாளிகளின் மரபணு
தொகுதிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதை மருந்து உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி மருத்துவ மாணவர்களும் கற்றறிவதன் மூலம் புற்றுநோய் குறித்தான புதிய புரிதலை சமூகத்தில் ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.