வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக வரும் வாரம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது.
வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஏற்கெனவே உறுதி அளித்திருந்த நிலையில், மனுவை தயார் செய்யும் பணியானது கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மனு தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும் வரும் வாரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தமிழக சட்ட துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் மூத்த வழக்கறிஞராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யும் பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும் அவர்கள் தரப்பிலும் வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக சில கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.