கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்திற்கான அனுமதியை உடனே ரத்து செய்க: திருமாவளவன்

கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்திற்கான அனுமதியை உடனே ரத்து செய்க: திருமாவளவன்
கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்திற்கான அனுமதியை உடனே ரத்து செய்க: திருமாவளவன்

கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற்று அந்த மக்களுக்கு ஆறுதலை அளித்த திமுக அரசு, கூடங்குளம் விரிவாக்கத்திற்கு அதிமுக அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து தமிழக மக்கள் யாவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த வாரம் கூடங்குளம் வளாகத்தில் 5 மற்றும் 6வது உலைகளுக்கான "first pour of Concrete" நிகழ்வு கூடங்குளத்தில் நடைபெற்றது. கூடங்குளம் அணு உலை வளாகம் இதன்மூலம் உலகில் ஒரே இடத்தில 6,000 மெவா உற்பத்தி செய்யக்கூடிய வளாகங்களின் பட்டியலில் இணைந்துள்ளதென தேசிய அணுமின் கழகம் பெருமை பட்டுக்கொண்டது. உண்மையில் இது பெருமைக்குரியதன்று ; கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்!

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள முதல் இரண்டு உலைகளுக்கு எதிராக இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையி்ல் உறுதிமிக்க போராட்டத்தை மூன்றாண்டுகளாக அப்பகுதிவாழ் மக்கள் தொடர்ச்சியாக நடத்தினார்கள். குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், தலித் மக்கள் என உழைக்கும் மக்கள் அணுசக்திக்கு எதிரான அப்போராட்டதை அறவழியில் நடத்தினார்கள். அமைதி வழியில் போராடிய அம்மக்கள் மீது அன்றைய அதிமுக அரசு வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. அதில் நான்கு பேர் பலியானார்கள். அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட கடுமையான வழக்குகள் பதியப்பட்டன. உழைக்கும் மக்கள் உறுதியுடன் நடத்திய அந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றனர்.

'மூன்றாம் தலைமுறை அணுவுலை' என்று தமிழக்தின் தலையில் கட்டப்பட்ட முதல் இரண்டு உலைகளும் இதுவரை 100க்கும் மேற்பட்ட முறைகள் பழுதாகி நின்றுள்ளன. அதனையொட்டி கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக "பூவுலகின் நண்பர்கள்" தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், " அணுக்கழிவுகளைக் கையாள அணுக்கழிவு மையம் ஒன்றை ஐந்தாண்டுகளில் அமைக்க வேண்டும்" என்று ஆணையிட்டிருந்தது. ஆனால், அதனை அமைக்காமல் ஐந்து ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய அணுமின் கழகம், "கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை அமைப்பது மிகப்பெரும் சவாலாக இருப்பதாகவும், இது முதல்முறையாக இந்தியாவில் அமைக்கப்பட இருப்பதாலும் மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் வேண்டும்" என கோரியது. ஆதாலால், உச்சநீதிமன்றம் மேலும் நான்கு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுத்துள்ளது. அது அடுத்த ஆண்டுடன் (2022) முடிவடைகிறது. ஆனால் தற்போது அணுக்கழிவு மையத்தின் கட்டுமான நிலை என்ன நிலையில் உள்ளதென தெரியவில்லை.

கூடங்குளம் அணுவுலைகள் இந்தியாவில் உள்ள பிற அணு மின்நிலையங்களைப் போல் கனநீர் உலைகள் அல்ல. இவை மென்நீர் உலைகள். மென்நீர் உலைகளில் இருந்து வரக்கூடிய கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் இல்லாததால், அக்கழிவை அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதற்கேற்ற ஒரு இடம் இன்னும் இந்தியாவில் கண்டறியப்படவே இல்லை.

இந்நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட அணு உலைகள் அடிக்கடி பழுதாகித் திணறிக் கொண்டிருப்பதாலும் அவற்றிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாலும் இங்கே மேலும் இரண்டு உலைகளை அமைக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

உலகத்தில் பல்வேறு நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டு ' புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை 'பயன்படுத்தும் முறைகளை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கையில், இந்தியாவும் அதைநோக்கி நகர்வதுதானே உண்மையான வளர்ச்சியாகும். மாறாக, கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகளை அமைக்க முயறசிப்பது ஏன்?

கடந்த 2017 ஆம் ஆண்டு, குஜராத் மாநில சட்டமன்றத்தில் அந்த மாநில முதலமைச்சர் சட்டமன்றத்தில், புகுஷிமா விபத்திற்கு பிறகு மக்களிடம் அச்சம் நிலவுவதால், இப்போது மட்டுமல்ல எப்போதுமே இங்கே அணுவுலைகளை அமைக்கமாட்டோம்" என்று தெரிவித்தார். குஜராத் மக்களுக்கு எது நல்லது கிடையாதோ அது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதாக இருக்க முடியாது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 'மிதிவிர்தி' யில் ஒரு அணு உலையைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளும் இந்திய ஒன்றிய அரசு, தமிழகத்தில் மட்டும் ஏன் அடுத்தடுத்து அணு உலைகளை அமைக்கிறது? மோடி அரசின் இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்நிலையில், கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற்று அந்த மக்களுக்கு ஆறுதலை அளித்த திமுக அரசு, கூடங்குளம் விரிவாக்கத்திற்கு அதிமுக அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து தமிழக மக்கள் யாவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அதேபோல, அணுவுலை விரிவாக்க முயற்சியைக் கைவிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com