உடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வு முடிவுகளை பார்க்காமல் உடல்களை ஒப்படைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும்வரை பாதுகாக்க வேண்டும் என உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உடலைக்கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்துவதால், உடல்களை ஒப்படைக்கும் வகையில் உத்தரவை மாற்றி அமைக்க அரசுக் கோரிக்கை வைத்தது. அப்போது நீதிபதிகள், உடல்களை கோரி உறவினர்கள் யாரும் நீதிமன்றத்தை அணுகாத நிலையில் அரசுக்கு என்ன அவசரம் எனக் கூறி அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
இந்நிலையில், தனது மகன் சண்முகம் உடலுக்கு உடற்கூறாய்வு முடித்துவிட்டதால் உடலை ஒப்படைக்க வேண்டும் என அவரின் தந்தை பாலைய்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இணைப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ரவீந்தரன், வேல்முருகன் அமர்வு, உடற்கூறு ஆய்வின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர்தான் உடலை ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் பாலையாவின் வழக்கு குறித்து தூத்துக்குடி சம்பவம் குறித்த பிரதான மனுதாரர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோரும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.