கடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை

கடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை

கடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை
Published on

கடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும் என பிசியோ, சித்த மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் இணைப்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர்‌ மாவட்டம் சோழத்தரத்தைச் சேர்ந்த திருமேனி என்பவருக்கு பாவேந்தன் என்ற 10 வயது மகன் உள்ளார். வலிப்பு நோயால் மூளை பாதிப்புக்கு ஆளான பாவேந்தனுக்கு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அச்சிறுவனை குணப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து சிகிச்சையளிக்க போதிய வருமானம் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய‌ அனுமதியளிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமேனி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக 3 பேர் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்த நீதிமன்றம், சிறுவனின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்‌க உத்தரவிட்டது.‌

அதன்படி, பாவேந்தனைப் பரிசோதித்த மருத்துவர்கள், தன்னை சுற்றி நடப்பதை சிறுவன் உணர்ந்து கொள்வதால், அவனை கருணை கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என‌ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் சிறுவனை குணப்படுத்த முடியா‌து என்ற அறிக்கையை படித்த நீதிபதிகள் கண் கலங்கினர். இதனால் நீதிமன்றத்தில் பெரும் சோகம் நிலவியது. இதுபோன்ற நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சையளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏன் திட்டம் வகுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வியை முன்வைத்தனர். இதுதொடர்பாக வரும் 23-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஏற்கனவே ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் கடலூர் சிறுவனை ((Trigger point therapy)) சிகிச்சை மூலம் தங்களால் குணப்படுத்த முடியும் என்று அரும்பாக்கத்தை சேர்ந்த அமோல் மறுவாழ்வு மையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இணைப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதேபோல, ஆரணி சித்த மருத்துவர் விஜய ஸ்ரீராம், ஆரணியை சேர்ந்த அரசு மருத்துவர் கண்மணியும் சிறுவனை குணப்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர சிறுவனின் சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை ஜான் என்பவர் கொடுத்துள்ளார். சிறுவனுக்கு தேவையான மாதாந்திர செலவை ஏற்பதாக பிரதர் பவுண்டேஷன் என்ற நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இதனைக்கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற கருணை உள்ளங்கள் இருப்பதால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது. இதுபோன்ற உதவிகளை தந்தை திருமேனி மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். சிறுவனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் தேவைப்பட்டால் அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்க அரசு பல்நோக்கு மருத்துவமனை டீனுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே மகனை குணப்படுத்த பத்தாண்டுகளாக வழி தேடி வரும் தனக்கு தற்போது மருத்துவ உதவியும் பண உதவியும் கிடைத்ததற்கு திருமேனி நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com