“விவாகரத்து மனுவில் ஜீவனாம்சமும் கோர முடியும்”- சென்னை உயர்நீதிமன்றம்
விவாகரத்து கோரும் மனுவில் நிரந்தர ஜீவனாம்சமும் கோர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பள்ளிக்கரணையை சேர்ந்த ஏ.சோபியா பிரான்சிஸ், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், விவாகரத்துடன் ரூ.1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார். இந்த மனுவை பரிசீலித்த சென்னை முதன்மை குடும்பல நல நீதிமன்றம், நிரந்தர ஜீவனாம்சம் கோரி தனியாகத்தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் எனக் கூறி மனுவை திருப்பி ஒப்படைத்தது.
இதை எதிர்த்து சோபியா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், விவாகரத்து சட்டப் பிரிவு 37-ல் விவாகரத்து கோரும் பிரதான மனுவுடன் ஜீவனாம்சம் கோர முடியும் என்று கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், விவாகரத்து மனுவில் நிரந்தர ஜீவனாம்சம் கோரிய மனுவை ஒரு வாரத்திற்குள் பட்டியலில் சேர்த்து விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.