கற்பூரம் + தைலம் சளிக்கு மருந்தா? குழந்தைக்கு பயன்படுத்தலாமா.. மருத்துவர் கொடுத்த எச்சரிக்கை!
சென்னை அபிராமபுரத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணாபுரம், வல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன். இவருக்கு திருமணமாகி கடந்த 8 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த சூழலில் குழந்தைக்கு கடந்த சில நாட்களாகவே சளி பிரச்சனை இருந்துவந்ததால், அதை வீட்டிலேயே சரிசெய்ய கைவைத்தியத்தை முயற்சித்துள்ளனர்.
அதன்படி குழந்தையின் சளி பிரச்னையை சரிசெய்ய, கற்பூரம் மற்றும் விக்ஸ் இரண்டையும் சேர்த்து குழைத்து குழந்தையின் மூக்கில் தேய்த்துள்ளனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக வெளியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கற்பூரம் + தைலம் சளிக்கு மருந்தா? அதை குழந்தைக்கு பயன்படுத்தலாமா? என்பது குறித்து மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.
குழந்தைக்கு கொடுப்பது தவறு?
குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து குழந்தை நல மருத்துவர் ஒருவர் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், “கற்பூரம் மார்பு பகுதியில் சளியின் அடர்த்தியை கரைத்து வெளியேற்றுவதாக தைலத்துடன் கலந்து குழந்தைகளுக்கு பயன்படுத்துவதுண்டு. ஆனால் இது மார்பு பகுதியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் ஒருவித அசெளகரியத்தை உண்டாக்கும். மார்பை சுற்றியுள்ள இடங்களில் இறுக்கம் உண்டாகும். இது பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கத்துக்கு வழிவகுக்கும். கற்பூரம் குணப்படுத்தும் மூலிகை என்று பலரும் இதை அதிகமாகவே வலி நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது கடுமையான பக்கவிளைவுகளை கொண்டது” என விளக்கமளித்துள்ளார்.