"பால் பொருட்களுக்கு கண்ணாடி பாட்டிலை பயன்படுத்தலாமா?": உயர்நீதிமன்றம் கேள்வி

"பால் பொருட்களுக்கு கண்ணாடி பாட்டிலை பயன்படுத்தலாமா?": உயர்நீதிமன்றம் கேள்வி
"பால் பொருட்களுக்கு கண்ணாடி பாட்டிலை பயன்படுத்தலாமா?": உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு வழங்கும் பொருட்களே நெகிழி பைகளில் அடைத்து வழங்கப்படும்போது பொதுமக்கள் எப்படி மனம் மாறுவார்கள் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பால் பொருட்களை நெகிழி பைகளுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் விற்கலாம் என யோசனையும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 14 வகையான நெகிழி பொருட்கள் மீதான தடையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்றுபதியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது,

அப்போது தமிழக அரசு தரப்பில் நெகிழி தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், நெகிழி பயன்படுத்தியதாக கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது உற்பத்தியாளர்கள் தரப்பில் உணவு பொருட்கள், திண்பண்டம், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் ஆகியவை நெகிழி பைகளில்தான் புகுத்தி விற்கப்படுவதாக கூறி நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது.
மேலும் அவர் மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும் , அதில் வைத்து கொடுக்கப்படும் 15 பொருட்களும் நெகிழி பைகளில் வைத்து கொடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கும் நிலையில், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை எடுத்துச் வருவதை தடுக்காத வரையில் அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் இல்லை என நீதிபதிகள் எச்சரிக்கை தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக கூறி சில்லரை வியாபார கடைகளை மூடும் நிலையில், அரசே நெகிழி பைகளில் விற்பனை செய்யலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை நெகிழி பைகளில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை என் தெரிவித்த நீதிபதிகள், அரசு நடத்தும் கடையில் நெகிழி பயன்படுத்தினால் எப்படி பொதுமக்கள் மத்தியில் மாற்றத்தை காணமுடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் பால் பொருட்களை முன்பு போல ஏன் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்கக்கூடாது எனவும், பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு நெகிழி பொருட்கள் பயன்படுத்தபடுகிறது என தெரிவித்த நீதிபதிகள், அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 13க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com