கொரோனா வைரஸால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மரணம்
கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் ஊடகத் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் 957 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மக்கள் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவலர்கள் என பல்வேறு துறையினர் உயிரிழந்த நிலையில் ஊடகத் துறையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன் (40). கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வேல் முருகன் உயிரிழந்தார். கொரோனாவால் சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரில் வசித்து வந்த வேல்முருகன் பல்வேறு ஊடகங்களில் பல ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர், அவரது மனைவி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். வேல் முருகனுக்கு ஒரு மகன் உள்ளார்.