முட்டை விலை ஏற்றத்தால் நீலகிரியில் பேக்கரி உற்பத்திப் பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.
பேக்கரியின் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படும் சர்க்கரை, மைதா, எசன்ஸ் விலை சிலமாதங்களாக ஏறுமுகமாகவே இருக்கிறது. தற்போது முட்டை விலையும் உயர்ந்துள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் எசன்ஸ் விலையில் அவுன்ஸ்க்கு 10 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்துடன் எரிபொருள் விலையிலும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது முட்டையின் விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் பன், பிஸ்கட், கேக், பப்ஸ் உள்ளிட்ட பேக்கரிப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. முட்டை அதிகம் பயன்படுத்தப்படும் கேக் வகைகள் 240 ரூபாயில் இருந்து 280 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதே போன்று 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரொட்டி 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது இதே போன்று அனைத்து வகையான பேக்கரி பொருட்களும் 20 முதல் 30 சதவீதம் வரை விலை உயர்வடைந்துள்ளது. இந்த விலை ஏற்றம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.