கிறிஸ்துமஸை கொண்டாட டிசம்பர் மாத தொடக்கத்திலேயே ஆயத்தமாகி விடுவார்கள் கிறிஸ்தவர்கள். இயேசுவின் வருகையை குறிக்கும் வகையில் வீட்டு வாசலில் நட்சத்திரங்களை தொங்கவிடுவது, குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைப்பது, சான்டா கிளாஸ் வேடமணிவது என கொண்டாட்டங்கள் களைகட்ட அதில் கேக் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
இந்த கேக்-களை தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியேறிய ஆங்கிலேயர்கள், பிளம் கேக் தயாரிப்பதை விழா எடுத்து கொண்டாட, அதை தற்போது வரை பாரம்பரியம் மாறாமல் கடைபிடித்து வருகின்றனர் நீலகிரி மக்கள். முதலில் வீடுகளில் சிறியளவில் நடத்தப்பட்ட இந்த கொண்டாட்டம், இப்போது நட்சத்திர விடுதிகள் வரை விழுதுவிட்டு பரவியுள்ளது.
பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பிளம் கேக் கலவை தயாரிக்கப்படும் நிலையில், அதற்கான நிகழ்ச்சி உதகையில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. உள்ளூர் முதல் வெளிநாடுகளில் இருந்து மக்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள, முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், செர்ரி, பேரீச்சம் பழங்களைக் கொண்டு கலவை தயாரானது. இதில் உயர்ரக மதுபானங்களும் சேர்க்கப்படுகிறது.
இந்த கலவை ஒரு மாதத்திற்கு பதப்படுத்தப்பட்டு பின்னர் அதனுடன் மாவு சேர்த்து பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கப்படும். மலைகளின் இளவரசியான உதகைக்கு, மற்றுமொரு மகுடம் சூட்டுவதுபோல் கேக் மிக்ஸிங் நிகழ்ச்சி ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.