
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை அருகே தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. 1,500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாகவும், இதற்கான நிலம், மின்சாரம், நான்கு வழிச்சாலை, குடிநீர் உள்ளட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுவர பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது. மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சசர் விஜயபாஸ்கர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் எந்த தடையும் இல்லை என்றார். மருத்துவமனை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.