\
C. Vijayabaskar Confirms Move to Vijay's TVK
சி. விஜயபாஸ்கர்Pt web

தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாளை தவெகவில் இணையவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Published on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கே. பழனிசாமி தலைமையில், 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலக்கட்டத்தில் அதிமுகவின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவியபோது, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான கே. பழனிசாமி உறுதிணையாக இருந்தவர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Vijay & Vijayabaskar
Vijay & Vijayabaskarweb

எனினும், இத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு சென்றதையடுத்து, மீண்டும் ஒரு உட்கட்சிப் பூசல் நிலவியது. அப்போது, சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர் அணியினர் கே. பழனிசாமி எதிராக போர்கொடித்தூக்கினர். தொடர்ந்து, கட்சிக்கட்டுப்பாட்டை மீறி தவெகவுக்கும் ஆதரவளித்திருந்தனர். இந்தசூழலில் தான், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கினார் கே. பழனிசாமி. இருந்தாலும், அதிமுக உட்கட்சிப் பூசல் தற்போது சற்று தணிந்திருக்கிறது.

C. Vijayabaskar Confirms Move to Vijay's TVK
மயிலாடுதுறை | ஒரு இடத்தில் சடலமான காதலர்கள்.. தற்கொலையா..? ஆணவ கொலையா?

இதற்கிடையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக அக்கட்சியில் இருந்து விலகி தவெக இணைந்திருக்கின்றனர். அதன்படி, இதுவரை 6 எம்.எல்.ஏ-க்கள் அதிமுகவில் இருந்து விலகியிருக்கும் நிலையில், 4 பேர் தவெக இணைந்துவிட்டனர். அந்தவகையில் தான், 5-வதாக தனது விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைவார் எனப் பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில் தான், சி. விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026), காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றுமொரு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அவரும் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

C. Vijayabaskar Confirms Move to Vijay's TVK
திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேனா? நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com