இடைத்தேர்தல் தேதியை அறிவித்து ஜனநாயக நெறிமுறைகளை காப்பாற்றுங்கள் - மு.க.ஸ்டாலின்
ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்கும் வகையில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மழைக்காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதியதாகவும், அதனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிப்பு தற்போது இல்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில், உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு ஒன்றரை ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தலை தள்ளிவைக்கும் முயற்சியை, தலைமைச் செயலாளர் மூலம் தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோதும், அவரது மரணத்திற்கும் பிறகும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தான் இடைத்தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பாக சட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், நீதிமன்றத்தின் விளக்கத்தை பெறுவதில் அக்கறை காட்டாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.