தமிழக அரசுக்கு மதுவால் அதிகரித்த வணிக வரி வருவாய்
தமிழகத்தின் வணிக வரி வருவாய் சென்ற நிதியாண்டில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மது மற்றும் எரிபொருள் மூலம் மட்டும் 48 சதவிகித வருவாய் கிடைத்துள்ளது.
சட்டப்பேரவையில், வணிக வரித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மது, பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் வரி வசூலித்ததில் அரசுக்கு சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வணிக வரி வருவாய் அதிகரித்துள்ளது. 2018-19ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் வணிக வரி வருவாய் 87 ஆயிரத்து 905 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, முந்தைய 2017-18ஆம் நிதியாண்டில் வணிக வரி வருவாய் 73 ஆயிரத்து 148 கோடி ரூபாயாக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்ததோடு, மது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி வசூலும் அதிகரித்ததே காரணமாகக் கூறப்படுகிறது. நடப்பு ஆண்டின் மார்ச் மாதம் வரை 9 லட்சத்து 66 ஆயிரம் பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்திருந்ததாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 7 லட்சத்து 45 பேர் மட்டுமே ஜிஎஸ்டியில் பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.
2018-19ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மது விற்பனை மூலம் 42 ஆயிரத்து 415 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வணிக வரி வருவாயில் 48 சதவிகிதம்.