தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து
தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு, கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் வகை 2-ல் உள்ள கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் பொதுப் போக்குவரத்தை தொடங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர வகை 3-ல் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே நகரப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 27 மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் சார்புடைய போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 11 மாவட்டங்கள் தவிர்த்து, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் இடையே பேருந்து சேவை கிடைக்கும்.

