‘பஸ் ஸ்டிரைக்’ சுமூக தீர்வு காண எதிர்க்கட்சியினர் கோரிக்கை
போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது.
இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தொழிலாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை எட்டுவதுதான் பொறுப்பான அரசின் கடமையாக இருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சுமூகமான தீர்வை காண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சுமூக தீர்வு காண வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.