தமிழக கேரள எல்லையான கம்பத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் கேரளா மற்றும் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
ஊதிய உயர்வு காரணமாக, தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மூன்றாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குறைவான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பாதிப்பு உள்ளாகியுள்ளனர். தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி மக்களின் பாதிப்பை குறைத்து வருவதாக, அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக, தமிழக- கேரள எல்லையான கம்பத்தில் கேரளா மற்றும் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பத்தில் உள்ள 2 பணிமனைகளிலும் தற்போது தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தமுள்ள 104 பேருந்துகளில் 49 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக ஓட்டுநர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது.