பேருந்து கட்டண உயர்வு: செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பேருந்து கட்டண உயர்வு: செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பேருந்து கட்டண உயர்வு: செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Published on

பேருந்து கட்டண உயர்வுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக போக்குவரத்துத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 22,509 பஸ்கள் உள்ளன. 1.40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தினமும் 2.02 கோடி பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் 20,488 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீடு வழங்காததால் 652-க்கும் அதிக பஸ்கள் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசுப் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கு பல ஆண்டுகளாக அதிகாரிகள் உதிரி பாகங்கள், இயந்திரங்கள் வாங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டது முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் அரசு பஸ்களில் ஜனவரி 20-ல் டிக்கெட் கட்டணம் நூறு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கழக நஷ்டம் மேலும் அதிகரிக்கும். எனவே அரசு போக்குவரத்து கழகத்தி்ல் 20,488 கோடி நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவும், அரசுப் போக்குவரத்து கழகக் கோட்டங்களின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவும், அதுவரை பஸ் டிக்கெட் கட்டண உயர்வுக்குத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு இது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com