தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 அதிமுகவினர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவர் மீதான பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ் மீது, அதிமுகவினர் பெட்ரோல் குண்டு வீசி, தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி என்ற 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.
தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, தர்மபுரி ஒன்றிய அதிமுக. செயலாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 24 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கு தண்டனையை எதிர்த்து 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று பேரின் தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய தமிழக அரசு சுமார் 1,600 கைதிகளை விடுதலை செய்தது. அப்போது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுவிக்க முடிவு செய்தது.
இதற்கான ஆவணத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. இதை முதலில் அவர், ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் அந்த 3 பேரையும் விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டது. இது தொடர்பாக ஆளுநருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட, ஆளுநர் அந்த மூவரையும் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டார். இதையடுத்து வேலூர் சிறையில் இருந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.