\
பொள்ளாச்சில் பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு
பொள்ளாச்சில் பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிப்புpt

பொள்ளாச்சி| காட்டுப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.. என்ன நடந்தது?

பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Published on
Summary

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு தாமரைக்குளம் தேசிய நெடுஞ்சாலையோர காட்டுப்பகுதியில், தனியார் தொழிற்சாலைக்குப் பின்புறம் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகள் எரிந்த நிலையில் இருந்ததால், சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேற்கு மண்டல டிஐஜி சாமிநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு தாமரைக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலைக்குப் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில், பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிணத்துக்கடவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகள் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல டிஐஜி சாமிநாதன், பேரூர் டிஎஸ்பி சுரேஷ், காவல் ஆய்வாளர்கள் வடிவேல்குமார், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். சடலம் கிடந்த இடத்தில் ரத்தக்கறைகள் இருந்ததால், மோப்பநாய் உதவியுடன் தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

மீட்கப்பட்ட பெண் அங்கேயே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா அல்லது வேறு எங்கேனும் கொலை செய்யப்பட்டு உடலை மறைக்கும் நோக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சில் பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு
சிவகாசி| திருமணத்தை மீறிய உறவால் 4 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்.!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com