புரெவி புயல்: தரங்கம்பாடி - டேனிஷ் கோட்டை பாதிக்கும் அபாயம்!

புரெவி புயல்: தரங்கம்பாடி - டேனிஷ் கோட்டை பாதிக்கும் அபாயம்!

புரெவி புயல்: தரங்கம்பாடி - டேனிஷ் கோட்டை பாதிக்கும் அபாயம்!
Published on

புரெவி புயல் காரணமாக கடல் சீற்றம், கனமழை எதிரொலியால் தரங்கம்பாடியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வாணகிரி முதல் தரங்கம்பாடி வரை 26 கடலோர மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. புரேவி புயல் காரணமாக, தொடர் மழை மற்றும் கடல் சீற்றத்தால் இந்த பகுதிகளைச் சேர்ந்த 20,000 மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 750 விசைப்படகுகளும், 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தபட்டுள்ளன.


கடல் சீற்றத்தால் தரங்கம்பாடியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையின் சுற்றுச்சுவர், பூங்கா ஆகியவை சிதிலமடைந்து வருகிறது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படுவதும், பின்னர் சீரமைக்க படுவதுமாக உள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்த புயல்களால் தொடர் கடல் சீற்றம் ஏற்பட்டு, டேனிஷ் கோட்டை முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


எனவே வரலாற்றுச் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டையை பாதுகாக்க நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதனிடையே, வங்கக் கடலில் உருவான புரெவி புயல் நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்து, இன்று அதிகாலை நிலவரப்படி, பாம்பனுக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com