கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - புதுச்சேரி அரசு அறிவிப்பு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். இந்தநிலையில் நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு செவ்வாய்கிழமை அறிவித்திருந்தது. இதையடுத்து, தற்போது அவருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளதாகவும் புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், காரைக்காலில் அமையவுள்ள புதிய மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்டப்படுவதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.