
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள சிராஜ் நகரில் பெரிய சாலை தெரு அமைந்துள்ளது. இது தஞ்சாவூர் - ராமேஷ்வரத்தின் பழயை பிரதான சாலையாகும். இங்கு அமைந்துள்ள ஆதாம் வாய்க்கால்களில், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி சுமார் 6.5 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள சிறிய பாலம் ஒன்று ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்ளேயே அந்த சிறிய பாலம் இன்று விபத்துக்குள்ளானது. இன்று காலை மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் பாரத்தை தாங்காத பாலம் இடிந்து உள்வாங்கியது. இதில் லாரியின் பின் சக்கரம் பாலத்தின் ஈடுபாட்டுக்குள் சிக்கி விபத்துக்குள்ளானது. இது குறித்து இப்பகுதி அப்பகுதி மக்கள் கூறுகையில், “மதுரையைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவத்தின் பணி சரியாக நடைபெறவில்லை. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஏற்கெனவே இந்த பணியின் போது கால்வாயின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதை மீண்டும் அவர்கள் கட்டினார்கள். பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று லாரி விபத்துக்குள்ளானது. இந்தப் பகுதியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய இந்த சாலையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வேளை லாரி விபத்துக்குள்ளாகாமல் பள்ளி வேன் விபத்துகுள்ளாகி இருந்திருந்தால் மாணவர்களின் கதி என்ன?” என்றனர்.
தரமற்ற முறையில் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனம் மீதும், இந்த பணிகளை ஆய்வு செய்யாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து விபத்து நடந்த பகுதியை மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பணி முடிந்து 15 நாட்கள்தான் ஆகிறது. ஆகவே இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி லாரி அதிக பாரத்துடன் வந்ததே விபத்துக்கு காரணம். இந்த விபத்து காரணமான லாரி ஓட்டுநர் மீதும், அதன் உரிமையாளர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தை லாரி உரிமையாளர்கள் கட்டி தருவதாக கூறியுள்ளனர்” என தெரிவித்தார்.