”இவ்வளவு விலை இருந்தா எப்படி வீடு கட்டுறது ?”

”இவ்வளவு விலை இருந்தா எப்படி வீடு கட்டுறது ?”
”இவ்வளவு விலை இருந்தா எப்படி வீடு கட்டுறது ?”

ஓமலூர் வட்டார கிராமங்களில் தொடரும் மழையால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பால் செங்கல் விலை ஒரு லோடுக்கு ரூ-1,500 வரை அதிகரித்துள்ளது. இதனால், வீடு கட்டுவோர் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. கிராமங்களில் நாட்டு செங்கல் சூளைகள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கும் செங்கல்கள் அனுப்பி வைக்கபடுகிறது. இந்தநிலையில் தற்போது ஓமலூர் வட்டார கிராமங்களில் தொடரும் மழையால் நாட்டு செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல் உற்பத்தி செய்ய பயன்படும் செம்மண் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் செங்கல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானத்தில் செங்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரி மற்றும் குன்றுகளில் இருந்து எடுக்கும் செம்மண் மற்றும் வண்டல் மண் மூலம் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓமலூர் வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் தினசரி லட்சக்கணக்கான செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டாக செங்கல் விலையேற்றம் இல்லாமல் ஒரே மாதிரியான விலையில் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் செங்கல் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 3 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட ஒரு லோடு செங்கல் 15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது 16,500 முதல் 17 ஆயிரம் என விலை அதிகரித்துள்ளது.

 விலை உயர்வால் வீடுகள் கட்டுவோருக்கு மேலும் சுமை கூடியுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செங்கல்  சூளைகளில் ஆய்வு செய்து ஏறிய விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வீடு கட்டுவோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறும்போது சேலம் மாவட்டம் முழுவதும் செங்கல் உற்பத்தி செய்தாலும், ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தான் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு  அனுப்பப்படுகிறது. சமீபத்தில் பெய்துவரும் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக செங்கல் விலை கூடியுள்ளது. செங்கல் சூளையில் கடந்த மாதம் 3.80 காசு முதல் 4 வரை விற்ற ஒரு சாதா செங்கல் 5.70 காசு எனவும், 5க்கு விற்ற சேம்பர் செங்கல் 7 எனவும், 3.50 காசுக்கு  விற்ற சிமெண்ட் செங்கல் 4.50 எனவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையில் இருந்து ஒரு செங்கலுக்கு 90 காசு வாடகை கட்டணம் உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்திற்கு இதே விலையில் தான் செங்கல் விற்பனை தொடரும் என்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com