மகனை இழந்த சோகத்திலும் மனிதநேயம் காட்டிய பெற்றோர் - விமானத்தில் சென்னை வந்த இருதயம்..!
சேலம் அருகே மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இருதயம் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விஜயகுமார் - ராணி தம்பதியின் மகன் சுரேந்திரன். இவர் கடந்த 8ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலை பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறினர். அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்த போதிலும், மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சுரேந்திரனின் பெற்றோர் முன்வந்தனர்.
இதனையடுத்து, சுரேந்திரனின் இருதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட ஏழு உறுப்புகள் வெவ்வேறு இடங்களுக்கு தானமாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. காவல்துறை உதவியோடு இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து காமலாபுரம் விமான நிலையம் கொண்டு செல்வதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. சுரேந்திரனின் உடலில் இருந்து பத்திரமாக பிரித்தெடுக்கப்பட்ட இருதயம், பின்னர் ஆம்புலன்ஸின் மூலம் விமான நிலையம் புறப்பட்டது.
ஆம்புலன்ஸ் செல்லும் சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்ததால், ஓட்டுநர் சுப்புராஜ் மற்றும் உதவியாளர் நாகராஜ் ஆகியோர் 25 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் கடந்து இருதயத்தை விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக இருதயம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்களுக்கு இருதய பிரச்னை இருப்பதால் தங்களை போன்றவர்களுக்கு மகனின் இருதயம் உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே உடல் உறுப்பு தானம் செய்ததாக சுரேந்திரனின் பெற்றோர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.