அத்தையை கொன்ற சிறுவன்.. சிசிடிவி காட்சியால் சிக்கினார்..!
சென்னை அமைந்தகரை பகுதியில் அத்தையை கொலை செய்ததாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் வசிக்கும் சங்கரசுப்பு என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2-ஆம் தேதி இடது கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வு அறிக்கை மூலம் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழ்ச்செல்வியின் உறவினரான 15 வயது சிறுவன், அவரை கொலை செய்தது தெரியவந்தது. தமிழ்ச்செல்வியின் மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து அவரைக் கொலை செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக சித்தரிக்க இடது கை நரம்பை துண்டித்ததாக சிறுவன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.