பெண் மருத்துவரின் வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டல்.. காதலிப்பதாக ஏமாற்றியவர் கைது
பெண் மருத்துவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (26). இவரது தந்தை அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இதனால் கல்லூரி படிப்பு முடித்த காசி வேலை எதற்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு துவங்கி அதில் தன்னை ஒரு சமூக ஆர்வலர், தொழில் அதிபர் போன்று காட்டிக்கொண்டதோடு அதன்மூலம் பல பெண்களிடம் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் இவரிடம் காதல் வயப்பட்டு பல லட்சம் ரூபாய் பணத்தையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இரு தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளிவந்ததையடுத்து பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் கோட்டார் போலீசார் இன்றுகாசியை கைது செய்தனர். தொடர்ந்து காசியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு துவங்கி அதில் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு கமெண்ட் செய்யும் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர்களுடன் பழகி காதலிப்பதாக ஏமாற்றி உள்ளார். நாகர்கோவில் , சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல பெண்கள் இவரது காதல் வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அவர்களை மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம், தான் ஒரு தொழில் அதிபர் எனக்கூறி பழகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது மாமா ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி அவசரமாக ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கூறி பணமும் வாங்கியுள்ளார். அதேப்போன்று பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக கூறி அவருடன் பழகிய நாட்களில் அவரின் வங்கிக் கணக்கில் தனது தொலைபேசி எண்ணையும் இணைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில்தான் பெண் மருத்துவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமீபத்தில் இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மருத்துவர் ஆன்லைன் மூலமாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
மேலும் அவரது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள், வீடியோக்களையும் நீக்கியுள்ளனர். தொடர்ந்து அவரது மொபைல் போனில் பல பெண்களின் புகைப்படம் இருக்கும் நிலையில் வேறு யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை என்பதும், குறிப்பிடத்தக்கது.