விஜய் பரப்புரையில் உயிரிழந்த குழந்தை
விஜய் பரப்புரையில் உயிரிழந்த குழந்தைpt web

‘விஜய் மாமாவை பாக்கணும்..’ ஆசையாக கேட்ட சிறுவன்.. கடைசி நாளாகிப்போன துயரம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் மாமாவை பார்க்க வேண்டும் என்று ஆசை ஆசையாக பெற்றோரோடு சென்ற சிறுவன் கூட்டத்தில் உயிரைவிட்டுள்ளார்.
Published on

கரூரில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும், பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் நேரிடையாக கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகி மேலும் சோகத்தை உண்டாக்கி வருகிறது.

பரப்புரைக்காக கரூர் மற்றும் கரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கூடிய நிலையில், கரூர், கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த சரவணன் - சந்திரகலா தம்பதியினரும் பரப்புரைக்கு சென்றுள்ளனர்.

web

8 ஆண்டுகளுக்கு முன்பு மணம் முடித்த இவர்களுக்கு, கிருத்திக் யாதவ், சாய் சரவணன் ஆகிய இரண்டு‌ மகன்கள் பிறந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று விஜய் கரூருக்கு வருவதை அறிந்த கிருத்திக் யாதவ், ‘விஜய் மாமாவை பார்க்க வேண்டும்’ என கேட்டுள்ளார். இதனையடுத்து, அவருடைய அம்மா சந்திர கலா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, உறவினர்களுடன் விஜயின் பரப்புரை நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

விஜய் பரப்புரையில் உயிரிழந்த குழந்தை
"விஜய்தான் குற்றவாளி என்பதை ஏற்கமாட்டேன்" - அண்ணாமலை

இந்த நிலையில், கூட்டம் அதிகமாக இருந்ததால் இரண்டாவது மகன் சாய் சரவணனை உறவினரிடம்‌ கொடுத்த சந்திர கலா, மூத்த மகனை மட்டும் தன்னோடு வைத்திருந்துள்ளார். நெரிசலில் சிக்கி இருவரும் கீழே விழுந்த நிலையில், நெரிசலில் ஓடியவர்கள் குழந்தை மீது ஏறி மிதிக்க, குழந்தை மயங்கியது. கிருத்தி, கிருத்தி என்று கதறியபடி குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போனார் தாய்.

ஆனால், கிருத்திக் யாதவ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்த நிலையில், அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, பாலாம்மாள்புரத்தில் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடும்பத்தினருக்கு மூத்த பிள்ளை என்பதால் ‘எப்போதும் சுட்டி குழந்தையாக இருந்து, அனைவரிடமும் பாசமாக விளையாடி மகிழ்ந்து அனைவரின் அன்பையும் முழுமையாக பெற்ற தங்க பிள்ளையை, இன்று புதைத்து விட்டோமே’ என ஒட்டுமொத்த குடும்பமே இடிந்துபோயுள்ளது. நேற்று இந்நேரம், விஜய் மாமாவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக கேட்ட சிறுவன், பரப்புரைக்கு சென்ற இடத்தில் மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பரப்புரையில் உயிரிழந்த குழந்தை
"சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" திமுக எம்பி கனிமொழி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com