காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவன்
திண்டுக்கல் அருகே காதலிக்க மறுத்த மாணவியை 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றில் மாணவி ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவரின் காதலை அப்பெண் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் மாணவியின் கழுத்தை அந்த மாணவர் பிளேடால் அறுத்துள்ளார். இதனால் ரத்தம் கொட்ட அப்பெண் வலியால் துடித்துள்ளார். உடனே தன்னுடைய கழுத்தையும் அறுத்த அந்த மாணவர் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.