கன்னியாகுமரி|வரதட்சணை கொடுமையால் மருமகள் உயிரிழப்பு; விபரீத முடிவுஎடுத்த மாமியாருக்கு நேர்ந்த சோகம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28), இவர் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் . கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இவருக்கும் கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பாபு என்பவரின் மகள் சுருதி பாபு (வயது 24) என்பவருக்கும் திருமணம் முறைப்படி நடைப்பெற்றது.
திருமணத்தின் போது பெண் வீட்டார், 45 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்க பணம், ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதுமண தம்பதியர்கள் கார்த்திக்-சுருதி பாபு வாழ்ந்து வந்த வீட்டில் அவர்களுடன் மாமியார் செண்பகவள்ளி -யும் வசித்து வந்துள்ளார்.. இதில் 3 மாதங்கள் கடந்ததும் மாமியார் தரப்பில் வரதட்சனை கொடுமை மற்றும் சித்திரவதை செய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது.
திருமணமாகி ஆறு மாதமே ஆன நிலையில், வீட்டில் சுருதி பாபு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
மருமகள் இறந்த நிலையில் மாமியாரும் தற்கொலை முயற்சி!
இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிர்ச்சி அடைந்த சுருதி பாபுவின் பெற்றோர் கோவையிலிருந்து குமரி மாவட்டம் வந்தனர். அப்போது தனது மகளை வரதட்சனை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து கொன்று விட்டனர், இது தற்கொலை இல்லை கொலை என பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு சுருதி அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பயந்து மாமியார் செண்பகவள்ளி விசம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், அவர் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.