ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அடையாளம் தெரியாத நபரொருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள், பயணிகளின் உடைமைகள், பார்சல் சேவை மையம், ரயில் நிலைய வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன், ரயில் நிலையத்தில் பயணிகளை தவிர மற்றவர்கள் பாதுகாப்பு கருதி அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும் சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்காததால், அது பொய்யான தகவல் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதேசமயம், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பு ஆந்திராவைச் சேர்ந்தது என கூறிய காவலர்கள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.