சென்னையில் போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனாம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி சிலர் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை தீப்பற்ற வைத்து வீசிச் சென்றனர். சத்தம் கேட்டு காவல் நிலையத்திற்குள் இருந்த இரவு பணியில் இருந்த போலீசார் வெளியே வந்து பார்த்தபோது தரையில் பாட்டில் உடைந்து கிடந்து தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அணைந்து விட்டது. உடனடியாக தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாட்டில்களை கைப்பற்றி ஆய்வு செய்தார். மேலும் தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தார். வீசப்பட்ட பாட்டில்களை பார்வையிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையடுத்து தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் மீது வீசப்பட்டது பெட்ரோல் வெடிகுண்டு என்று தகவல் வெளியானது. ஆனால் அதனை சென்னை காவல்துறை மறுத்து விட்டார். மது பாட்டிலில் மண்ணெண்ணை நிரப்பி பற்ற வைத்து போட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் 7 கேமராக்கள் இருக்கில் அதில் வாசலில் 3 கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறது. ஒரு கேமராவை தவிர வேறு எதுவும் வேலை செய்யவில்லை. ஒன்றில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
காவல் நிலையம் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காவல்நிலையத்திற்கு பின்புறத்தில் பகுதியைச் சேர்ந்த சிலர் வீசியிருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த காரணத்தால் வீசியிருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெசன்ட் நகரில் உள்ள கண்ணகி நகரில் வினோத், மணி உள்ளிட்ட 5 பேரை நேற்றிரவு காவல் துறையினர் கைது செய்தனர்.