அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - ஒருவர் கைது
அறந்தாங்கி அருகே காணாமல் போன ஏழு வயது சிறுமி வீட்டின் அருகே ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், முக்கியமாக திருப்பமாக ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூரான், செல்வி தம்பதி. இவர்களது 7வயது மகள் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இரவு 7 மணி வரை வீட்டிற்கு வரவில்லை. ஆகவே பெற்றோர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை. அதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் தன்னுடைய மகளை காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிவரை தேடிய நிலையில் சிறுமியின் வீட்டின் பின்னால் 200 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் சிறுமி ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்துள்ளது. அதனைப் பார்த்தவர்கள் உடலை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியின் தலை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் உடல் கிடந்த இடத்தின் அருகே ரத்தம் சிதறி இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரணையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருவதாகவும் அவருடன் அவரது நண்பர் ஒருவரையும் அழைத்து சென்று விசாரித்து வருவதாகவும் தெரிகிறது.
சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் தலையில் காயங்கள் உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்தி குமார், “என்ன காரணத்திற்காக சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சிறுமியின் பிரேதப் பரிசோதனையின் போதுதான் அவர் உடலில் உள்ள காயங்களுக்கான காரணம் தெரிய வரும்” அவர் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்திருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.